கடல் கடந்த காதல்: அமெரிக்க வாலிபரை திருமணம் செய்த காரைக்குடி பெண்

பிரியா-சாம் திருமண ஏற்பாடுகள் காரைக்குடியில் நடந்தன.

Update: 2024-01-23 01:42 GMT

காரைக்குடி,

காதல் கடல் கடந்தும் வெல்லும் என்ற கூற்றை நிஜமாக்கும் வகையில் எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளன. அதுபோல சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் மேலும் ஒரு திருமண வைபவம் நடந்து உள்ளது.

இது குறித்த தகவல்கள் பின்வருமாறு:-

காரைக்குடி முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்த தம்பதி சிதம்பரம்-மீனாள். இவர்களது மகள் பிரியா. இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார். அவருக்கும், நியூயார்க் பகுதியை சேர்ந்த சாம் என்பவருக்கும் இணையதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இதில் பிரியாவிடம், காரைக்குடி நகரை பற்றியும், மக்களின் வாழ்க்கை முறை, செட்டிநாட்டு கலாசாரங்கள், திருமண சடங்குகள், தமிழக மக்களின் கலாசாரம், திருவிழாக்கள் உள்ளிட்டவை பற்றியும் சாம் கேட்டு அறிந்தார். செட்டிநாட்டு பாரம்பரிய பழக்க, வழக்கங்கள் பண்டிகை கொண்டாட்டங்களால் சாம் ஈர்க்கப்பட்டு உள்ளார். இதன்மூலம் செட்டிநாட்டு கலாசாரத்தின் மீதும், காரைக்குடியைச் சேர்ந்த பிரியா மீதும் சாம் காதல் கொண்டார். பிரியாவும் அவர் மீது அன்பு செலுத்தி பழகினார்.

இதுபற்றி இருவரும் தங்கள் பெற்றோரிடமும் தெரிவித்தனர். இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து காரைக்குடியில் செட்டிநாட்டு பாரம்பரிய முறைப்படி தங்கள் திருமணம் நடக்க வேண்டும் எனவும் சாம் விரும்பினார்.

இதையடுத்து பிரியா-சாம் திருமண ஏற்பாடுகள் காரைக்குடியில் நடந்தன. திருமணத்துக்காக சாம், அவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் இருந்து காரைக்குடி வந்திருந்தனர். நேற்று காலையில் மணமகன் சாம், பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் பிரியா, பட்டு சேலையுடன் மணக்கோலத்தில் வந்தார். அவர்கள் இருவருக்கும் தமிழ் கலாசாரத்தின்படியும், செட்டிநாடு நகரத்தார் பாரம்பரிய முறைப்படியும் திருமணம் நடந்தது.

மணமகன் பெற்றோர், உறவினர்களும் தமிழக பாரம்பரிய உடையை ஆர்வமுடன் அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்