ஒரே இடத்தில் 700 டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து உரிமையாளர்கள் போராட்டம்
பல்லடம் அருகே ஒரே இடத்தில் 700 டிப்பர் லாரிகளை நிறுத்தி வைத்து கல்குவாரிகள், கிரசர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம்
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கவும், லைசென்ஸ் வழிமுறைகளை எளிதாகக்கவும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26 -ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் கடந்த 4 நாட்களாக பல்லடம் பகுதியில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700 -க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட குவாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-
பாதிப்பு
முறையான அனுமதி பெற்றுக்கொண்டு கல்குவாரிகள் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க கல்குவாரிகளுக்கு சொந்தமான 700-க்கும் மேற்பட்ட லாரிகளை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். இது தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும்.. கடந்த 4 நாட்களாக நடைபெறும் போராட்டத்தால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தால் நேரடியாக 20 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 2 லட்சம் தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு எங்களது கோரிக்கைகளை பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கல்குவாரிகள் வேலை நிறுத்தத்தால் எம்.சாண்ட், ஜல்லி கற்கள், ரெடிமிக்ஸ் கான்கிரீட் உள்ளிட்டவை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.