சனிப்பெயர்ச்சி விழா: மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்தார் சனிபகவான்

தங்க காக வாகனத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Update: 2023-12-20 12:53 GMT

சென்னை,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருக்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீசனீஸ்வரர் பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் சனிப்பெயர்ச்சி விழா இன்று மாலை 5.20 மணிக்கு நடைப்பெற்றது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசித்துள்ளார்.

சனிப்பெயர்ச்சி நாளில் கிழக்கு நோக்கி சந்நிதிகொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. மிகச் சரியாக மாலை 5.20 மணிக்கு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி கிரகம் பிரவேசிப்பதை குறிக்கும் வகையில் மங்கள வாத்தியக் குழுவினர் இசையின்போது ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

கோவில் வளாகத்துக்குள், தங்க காக வாகனத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனிப்பெயர்ச்சி நாளில் கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்கள், தங்க காக வாகனத்தில் அருள்பாலிக்கும் உற்சவரை வழிபட்டு செல்ல கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

இன்று மாலை முதல் நாளை மாலை வரை என 24 மணிநேரமும் கோவில் நடை மூடாமல் விடிய, விடிய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிப்பெயர்ச்சிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்