பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக உள்ள முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-11 05:18 GMT

சென்னை,

கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்தவர் ராஜேஷ்தாஸ். இவர் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணியில் இருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து ராஜேஸ் தாசுக்கு விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு, தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்தார்.

அதில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்றும், சிறைக்குள் செல்வதற்காக சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால், தண்டனையை நிறுத்தி வைக்கவும், சிறை தண்டனை தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கோர்ட்டு மறுத்துவிட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு, நாளை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அதற்குள், ராஜேஷ்தாசை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். நேற்று முன் தினம் ராஜேஷ்தாசின் வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது, அவர் வீட்டில் இல்லை.

அவர் வீட்டு காவலாளியிடம் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், ராஜேஷ்தாஸ் இல்லாததால், திரும்பி சென்றுள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ்தாசை செவ்வாய்க்கிழமைக்குள் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதற்குள் அவர் கைது செய்யப்படாவிட்டால் தலைமறைவாக உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஐகோர்ட்டில் தகவல் தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாசுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ராஜேஷ் தாஸ் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்