ஆதார் பதிவுக்காக நீ்ண்ட நேரம் காத்திருக்கும் நிலை

திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

Update: 2023-07-12 22:17 GMT

காரியாபட்டி,


திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஆதார் சேவை மையம்

திருச்சுழி தாலுகாவில் 250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் திருச்சுழி மற்றும் நரிக்குடியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விருதுநகர் மாவட்ட எல்லையான இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக தினமும் திருச்சுழி தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

அதிலும் குறிப்பாக ஆதார் சேவைகளை பெறுவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்தநிலையில் திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில் தினமும் 25 டோக்கன் வரை மட்டுமே வழங்கப்படுவதாகவும், மேலும் அவ்வாறு வழங்கப்படும் டோக்கனுக்கு மட்டுமே ஆதார் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காத்து கிடக்கும் நிலை

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்திற்கு தினமும் எண்ணற்ற பேர் பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர். அதிலும் குறிப்பாக எண்ணற்ற பேர் ஆதார் அட்டை எடுக்க வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த மையத்தில் தினமும் 25 பேருக்கு மட்டுேம டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் சிலர் மட்டுமே பயன் பெறுகின்றனர். அதிகாலை 4 மணி முதல் நீண்ட நேரம் காத்து இருந்தவர்கள் பயன்பெற முடியாத சூழ்நிலை உள்ளது. ஆதார் சேவைகளை பெற வெகு சீக்கிரமாகவே தாலுகா அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது.

கூட்டம் அதிகரிப்பு

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் ஒரே நேரத்தில் ஆதார் சேவை மையத்திற்கு அதிகாலையிலேயே வந்து நாள் முழுவதும் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது.

திருச்சுழி தாலுகா அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் வந்தபோது 2 நபர்கள் பணியாற்றிய நிலையில் நாளொன்றுக்கு 50 டோக்கன் வரை பதிவாகியது.

நடவடிக்கை

இந்த நிலையில் போதியளவு பணியாளர்கள் பற்றாக்குறையால் தற்போது 25 டோக்கன் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆதலால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை நியமித்து ஆதார் சேவையை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்