நெடுந்தூர ஓட்டப்பந்தயம்: உற்சாகமாக பங்கேற்ற மாணவ-மாணவிகள்- ஆயுதப்படை போலீசார் முதலிடம்
மதுரையில் நடந்த அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். இதில் ஆண்கள், பெண்கள் பிரிவில் ஆயுதப்படை போலீசார் முதலிடம் பிடித்தனர்.
அண்ணா ஓட்டப்பந்தயம்
அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையை ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாசாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கும் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிக்கு இணையாக அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நேற்று காலை மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் நடந்தது. அதில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 8 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டரும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களில் மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டரும் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கு நுழைவு வாயிலில் தொடங்கி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகம், தாமரை தொட்டி, ஐ.டி.ஐ. புதூர் பஸ்நிலையம், மூன்றுமாவடி, சர்வேயர்காலனி, சூர்யாநகர், கடச்சனேந்தல் வரை நடந்தது.
போட்டியின் முடிவில் மாணவர்களுக்கான 8 கிலோ மீட்டர் பிரிவில் சட்டக்கல்லூரி மாணவர் அபிமன்யுகேசவன் முதலிடமும், திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரி மாணவர் தயாசேகர் 2-ம் இடமும், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் கார்த்திகேயன் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
போலீசார் வெற்றி
மாணவிகளுக்கான 5 கிலோ மீட்டர் பிரிவில் மதுரை லேடி டோக் கல்லூரி மாணவிகள் புனிதா, சிந்து, வர்ஷா ஆகியோர் முதல் 3 இடங்களை பெற்றனர். ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் போட்டியில் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் முகிலன் முதலிடத்தை பெற்றார். 2-வது இடத்தை ஈஸ்வரன், 3-வது இடத்தை சிவசக்திநாதன் ஆகியோர் பிடித்தனர். பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் போட்டியில் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் தங்க பென்னிலா முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை சரண்யாதேவி, 3-வது இடத்தை சவுந்தர்யா ஆகியோர் பெற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 இடம் பெறுபவர்களுக்கு முதல்பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம், 4 முதல் 10 இடம் பெற்றவர்களுக்கு ரூ.1000 என பரிசுத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. போட்டியில் 281 பேர் கலந்து கொண்டனர். பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் பியூலா, அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் ஜான்பொன்னி, அரசு மறுவாழ்வு மைய டாக்டர் ராஜேஸ்கண்ணன், போலீஸ் மருத்துவமனை டாக்டர் இளந்தென்றல், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, விடுதி மேலாளர் கண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினர்.