மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு விரைவில் கடன் தள்ளுபடி
மழையால் 33 சதவீதம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கான கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.;
கடலூரில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தண்ணீர் வடிந்தபிறகு சேத விவரங்கள் கணக்கெடுக்கப்படும். பயிர்கள் 33 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி
மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடன்களை தள்ளுபடி செய்ய துறை ரீதியான ஆய்வு நடந்து வருகிறது. அதையும் விரைவில் தள்ளுபடி செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.75 கோடி வரை கடன் தள்ளுபடி செய்ய தயார் நிலையில் உள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.