கூட்டுறவு துறை மூலம் ரூ.9¾ கோடி கடன் உதவி

திருவாரூரில் கூட்டுறவு துறை மூலம் ரூ.9¾ கோடி மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர்-எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.;

Update:2023-10-01 00:15 IST

கடன் மேளா நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் சார்பில் கடன் மேளா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் பூண்டி.கே.கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரூ.9¾ கோடி மதிப்பிலான கடனுதவியை அவர்கள் வழங்கினர். அப்போது கலெக்டர் கூறியதாவது:-

கடந்த 25-ந் தேதி அன்று கொரடாச்சேரி மற்றும் திருவாரூர் வட்டாரத்திலும், 26-ந் தேதி திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்திலும் கூட்டுறவு நகர வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மக்கள் எளிதாக கடன் பெறும் பொருட்டு கடன் மேளா நடத்தப்பட்டு கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

ரூ.9 கோடி...

அதன் அடிப்படையில் கடன் மேளாவில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. கால்நடை பராமரிப்பு கடன் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் 12 பேருக்கும், மத்திய கால கடன்கள் ரூ.10 லட்சத்து 95 ஆயிரம் 20 பேருக்கும், 411 மகளிர்சுய உதவிக்குழுவிற்கு ரூ.7 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம், 9 பேருக்கு வீட்டு அடமான கடன் ரூ.77 லட்சத்து 50 ஆயிரம், 2 பேருக்கு வீட்டு கடன் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம், 31 பேருக்கு பண்ணைசாரா கடன் ரூ.21 லட்சத்து 15 ஆயிரம், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 48 ஆயிரம், டாம்கோ கடன் ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் 24 பேருக்கும் என மொத்தம் 702 பேருக்கு ரூ.9 கோடியே 81 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் குமாரசாமி, துணை பதிவாளர் (நுகர்பொருள் வழங்கல்) பாத்திமா சுல்தானா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்