நாகையில் 284 பேருக்கு ரூ.39 லட்சம் கடன் உதவியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
தொடக்க விழா
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் நுண் தொழில் நிறுவன நிதி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயலாளர்கள் வேல்முருகன், தாரிக் செய்யது ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் 284 பயனாளிகளுக்கு 38 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் வழங்கி பேசுகையில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாகை மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் நுண் தொழில் நிறுவன நிதி திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
வேைலவாய்ப்புகளை உருவாக்குதல்
வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது நம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டாரங்களில் 29 ஊராட்சிகளிலும், தலைஞாயிறு வட்டாரங்களில் 24 ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரக தொழில் முனைவுகள் உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நோக்கம் ஆகும்.
ரூ.38 லட்சம் கடன் உதவி
அதன் அடிப்படையில் நுண் தொழில் நிறுவன நிதி திட்ட தொடக்க விழாவில் முதல் கட்டமாக நாகப்பட்டினம் மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 ஊராட்சிகளுக்கு நுண்தொழில் நிறுவன நிதியாக 35 பயனாளிகளுக்கு ரூ.17லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிலும், சமுதாய பண்ணை பள்ளி மூலமாக 95 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும், சமுதாயத்திறன் பள்ளி மூலமாக 150 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் மற்றும் இணை மாநிலத்திட்டத்தின் மூலமாக 4 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 76 ஆயிரத்து 560 மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் ரூ.38 லட்சத்து 83 ஆயிரம் 560 மதிப்பீட்டில் நிதிக்கான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.