கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்

Update:2023-12-28 10:14 IST
Live Updates - Page 4
2023-12-28 05:28 GMT

விஜயகாந்த் உடலைப் பார்த்து தொண்டர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரின் இதயங்களை கலங்கச் செய்தது.

2023-12-28 05:17 GMT

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2023-12-28 05:07 GMT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

2023-12-28 05:04 GMT

தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்- பிரதமர் மோடி இரங்கல்

விஜயகாந்த் தன்னை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘விஜய்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது நடிப்பினால் கோடிக்கணக்கான இதயங்களைக் கவர்ந்தவர். ஒரு அரசியல் தலைவராக, தமிழக அரசியல் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது கடினம்.

எனக்கு அவர் நெருங்கிய நண்பராக இருந்தார். பல ஆண்டுகளாக அவருடனான தொடர்புகளை நான் நினைவுகூர்கிறேன். இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு எனது ஆறுதலை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி’ என பிரதமர் தெரிவித்துள்ளார்.

2023-12-28 04:50 GMT

டிடிவி தினகரன் இரங்கல்

விஜயகாந்த் மறைவுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும்

இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் அவர்கள் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

2023-12-28 04:47 GMT

விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். 

2023-12-28 04:44 GMT

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18-ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11-ந்தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் சோகத்தில் உறைந்தனர்.

விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்