மோட்டார் சைக்கிள்களில் கடத்திய ரூ.2 லட்சம் சாராயம் பறிமுதல்

நாகை அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆற்றில் குதித்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-03-21 18:45 GMT

நாகை அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆற்றில் குதித்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

சாராய கடத்தல்

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. மேலும் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.

இதனை கண்காணித்து, தடுக்க மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகை மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் குதித்து தப்பிய மர்ம நபர்கள்

அப்போது நாகை பெருங்கடம்பனூர் அருகே வளப்பாறு பாலத்தில் புதுச்சேரி மாநில சாராய மூட்டைகளுடன் 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை வழிமறித்தனர்.

போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள், சாராய மூட்டைகளுடன் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு, அருகில் உள்ள ஆற்றில் குதித்தனர். அவர்களை பிடிக்க போலீசாரும், ஆற்றில் குதித்தனர். ஆனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ரூ.2 லட்சம் சாராயம் பறிமுதல்

இதையடுத்து மோட்டார் சைக்கிள்களுடன் ரூ.2 லட்சம் மதிப்பிலான சாராய மூட்டைகளை பறிமுதல் செய்து நாகை மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த சாராய பாக்கெட்டுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் சாராய பாக்கெட்டுகளை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்திய வந்து தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்