கடலூரில் தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

கடலூரில் தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-06-11 18:45 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் கடந்த மாதம் 28-ந்தேதி கடலூர் மாவடிப்பாளையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் மகன் விலாங்கு என்கிற நடராஜன் (வயது 36) என்பவர் தனது வீட்டின் அருகே 120 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தார்.

இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சாராய வியாபாரியான இவர் மீது கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையங்களில் 4 சாராய வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் நடராஜனை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்