மத்திய அரசைப்போன்று மாநில அரசு, அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தல்

மத்திய அரசைப்போன்று மாநில அரசு, அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தப்பட்டது.

Update: 2022-08-16 19:19 GMT

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது;-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு, 1.7.2022 முதல் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார். மத்திய அரசு 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அதே 3 சதவீத அகவிலைப்படி உயர்வை 1.7.2022 முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அரசு பணியாளர்கள் 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. அதனை 6 மாதங்களுக்கு தள்ளிக் கொடுப்பதால் தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். மேலும் வருகிற 25-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்தது போல் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அந்த ஆர்ப்பாட்டத்தின்போது தற்போது விடுபட்டுள்ள 6 மாத அகவிலைப்படி உயர்வு குறித்தும் போராட்டம் நடத்துவோம். அகவிலைப்படி பெறாத பல்வேறு அரசு பணியாளர்கள் உள்ளனர். உதாரணமாக அடிமட்ட பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுவது இல்லை. அவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அகவிலைப்படியாக வழங்க அரசு முன் வரவேண்டும். மேலும் அகவிலைப்படி உயர்வு பற்றி சங்கங்களை அழைத்து தமிழக அரசு இதுவரை பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை. சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். ஒட்டுமொத்த உற்பத்தியில் 16 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் வரியாக பெற முன் வந்தால் அரசுக்கு நிதிச்சுமை என்பது இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்