தர்மபுரி நகரில் ரூ.5 லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் சீரமைக்கும் பணி-நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு
தர்மபுரி:
தர்மபுரி நகரில் பஸ் நிலையங்கள், 4 ரோடு, அரசு மருத்துவமனை மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் 15-க்கும் மேற்பட்ட உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மின்விளக்குகள் எரியாததால் அதனை உடனே சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ரூ.5 லட்சம் மதிப்பில் தர்மபுரி நகரில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளை சீரமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொங்கல் பண்டிகைக்குள் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், பொறியாளர் ஜெயசீலன், தி.மு.க. நகர செயலாளர் நாட்டான் மாது, நகராட்சி கவுன்சிலர்கள் தங்கமணி, முல்லைவேந்தன், சுருளிராஜன், ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.