ஏற்காட்டில் விடிய, விடிய சாரல் மழைபொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Update: 2023-07-06 20:38 GMT

சேலம்

ஏற்காட்டில் விடிய, விடிய பெய்த சாரல் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சாரல் மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணி முதல் சேலத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சீதோஷண நிலை ஏற்பட்டது. மேலும் இடைவிடாமல் தொடந்து சாரல் மழை பெய்தது.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகலுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழையினால் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மாணவர்கள் பலர் குடைபிடித்தவாறும், மழை கோர்ட் அணிந்து கொண்டும் சென்றனர். சிலர் சாரல் மழைக்கு ஜாலியாக நனைந்தும் கொண்டு சென்றதையும் பார்க்க முடிந்தது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்த சாரல் மழையினால் 4 ரோடு, புதிய பஸ் நிலையம், 5 ரோடு, அழகாபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்பவர்களும் சற்று சிரமம் அடைந்து தங்களது அலுவலகங்களுக்கு சென்றனர். இதுதவிர ஆற்றோர காய்கறி மார்க்கெட், செவ்வாய்பேட்டை பால்மார்க்கெட், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் வியாபாரம் செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று முன்தினம் இரவு பெய்ய ஆரம்பித்த சாரல் மழை நேற்று காலை 11 மணி வரை தொடர்ந்து பெய்தது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக மழையினால் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கினர்.

காபி விவசாயம் பாதிப்பு

மழையினால் அங்கு காபி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மலை பாதைகளில் உள்ள நீரூற்றுகளில் தண்ணீர் வர தொடங்கி உள்ளது. மேலும் ஏற்காட்டில் குளிர் அதிகளவு வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஏற்காட்டில் 2.4 மில்லி மீட்டரும், காடையாம்பட்டி, கரியகோவில் ஆகிய பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டரும், ஆத்தூர், ஆணைமடுவு ஆகிய பகுதிகளில் தலா ஒரு மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்