குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 'லிப்ட்' ஆபரேட்டர் காயங்களுடன் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை

பெரம்பூர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ ஆபரேட்டர் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-07-08 09:45 GMT

பெரம்பூர் ரமணா நகர் கவுதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 'லிப்ட்' ஆபரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் (வயது 65) என்பவர் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் தலையில் ரத்த காயங்களுடன் ஜோசப் மயங்கி கிடந்தார்.

இதை கண்ட குடியிருப்பு வாசிகள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து ஜோசப்பை பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த செம்பியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து ஜோசப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான ஜோசப்பை யாரேனும் மாடியில் இருந்து தள்ளி விட்டார்களா? அல்லது அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் 'லிப்ட்'ஆப்பரேட்டர் மர்மமான முறையில் பலியான சம்பவம் குடியிருப்பு வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்