சுல்தான்பேட்டையில் கோழிப்பண்ணைகளை முறையாக பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து- உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை
சுல்தான்பேட்டையில் கோழிப்பண்ணைகளை முறையாக பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டையில் கோழிப்பண்ணைகளை முறையாக பராமரிக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உரிமையாளர்களுக்கு சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கோழிப்பண்ணைகள் மீது குற்றச்சாட்டு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் செலக்கரிச்சல், சித்தநாயக்கன்பாளையம், செஞ்சேரி, திம்மநாயக்கன்பாளையம், வதம்பச்சேரி, ஜல்லிபட்டி உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிகள் பொள்ளாச்சி, கோவை, கேரளா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில், ஒன்றியத்தில் பல பண்ணைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக பண்ணையில் உள்ள கழிவுகளில் ஈக்கள் உற்பத்தி அதிகமாகி அருகில் வசிக்கும் பொதுமக்களை பாதிப்பு அடையச்செய்கிறது. சில நேரங்களில் மிகவும் சுகாதார கேட்டை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக பல குற்றச்சாட்டுக்கள் மாவட்டம் நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு சென்றன.
உரிமம் ரத்து
இதனையடுத்து, இதனை தடுக்கும் வகையில், சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு, சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் பண்ணையில் எவ்வாறு ஈக்களை கட்டுப்படுத்த வேண்டும். கிருமி நாசினி தெளித்து பண்ணையை எவ்வாறு சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். ஈக்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து சுகாதாரத் துறையினர் விளக்கி பேசினர். மேலும், பண்ணைகள் சிறப்பாக பராமரிக்கப்படாமல் அதில் இருந்து துர்நாற்றம் மற்றும் ஈக்கள் உற்பத்தி அதிகமாகி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டால், அந்த பண்ணையின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில், பண்ணை உரிமையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.