பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கேட்க முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

Update: 2023-12-18 09:42 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் மிக்ஜம் புயலின் தாக்கத்தால் பெருமழை கொட்டியது. இதனால், சென்னை நகரம் வெள்ளத்தில் மிதந்தது. பெரும் பாதிப்புகளை இந்த வெள்ளம் ஏற்படுத்தி சென்றது. தற்போது தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

நெல்லை நகரத்திலும் பல இடங்களில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் நிற்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கனமழை இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெள்ள மீட்பு பணிகளும் அங்கு முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனிடையே, பிரதமர் மோடியை சந்தித்து பேச முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்.

வெள்ள பாதிப்புகள் தொடர்பாக நிவாரண நிதி வழங்கிட பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிகிறது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்டு  மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்