தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிப்பு

தேங்காய் உலர்களங்களில் பணிகள் பாதிப்பு

Update: 2022-10-16 12:47 GMT

காங்கயம்

காங்கயம் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.

தேங்காய் பருப்பு உலர் களங்கள்

காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை அமைத்துள்ளனர்.

தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது. தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப்பணிகள் முற்றிலுமாகப்பாதிக்கப்படும்.

பணிகள் பாதிப்பு

இந்த நிலையில் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது லேசான சாரல் மழையும், இரவு நேரங்களில் கன மழையும் பெய்து வந்தது. மேலும் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது.

இதனால் நேற்று காங்கயம் மற்றும் சுற்றுவட்டார தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.இதனால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலைகளில் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்