குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தடைவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்

குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தடைவித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-01-28 13:17 GMT

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தும், குட்கா, பான்மசாலா விற்பனைக்கு தடை இல்லை என்றும் கர்நாடகாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு விதித்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

இளைஞர்களின் உழைப்புத்திறனை கெடுத்து, பணியில் கவனம் செலுத்தாத நிலையையும், பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகவும், சமூக குற்றங்களுக்கு அடிப்படையாகவும், சுயகட்டுப்பாடு இழந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு அடித்தளமாகவும், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட மனித உடல் உறுப்புகளுக்கு பாதிப்பினை உண்டாக்கி, புற்றுநோய் உள்ளிட்ட பிற நோய்களை ஏற்படுத்தி மனிதர்களை செயல்படாத நிலைக்கு தள்ளுவதில் முழுபங்கு வகிக்கும் இது போன்ற குட்கா, பான்மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் தடை செய்வது காலத்தின் கட்டாயம்.

எனவே, தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டின் உத்தரவினை எதிர்கொண்டு, இளைஞர்கள், மாணவர்களிடையே அதிகம் பரவக்கூடிய குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதித்திட கொள்கை முடிவெடுத்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்