தீட்சிதர்கள் விவகாரத்தில் புகார்கள் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சேகர் பாபு

சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் புகார்கள் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

Update: 2023-05-06 04:58 GMT

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் சென்னையில் வில்லிவாக்கம் எல்.சி.1 மேம்பாலப் பணிகளையும், ஸ்டீபன்சன் சாலை மேம்பாலப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபுவிடம் அறநிலையத்துறைக்கு கார் வாங்கியது தொடர்பான கவர்னர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறைக்கு கார் வாங்கியதில் ஏதாவது ஊழல் நடந்துள்ளதா? காருக்கு உண்டான தொகையைவிட அதிக தொகை செலவிடப்பட்டதா? அல்லது அந்த கார் அறநிலையத்துறை பணியை விட வேறு பணிக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பதை சொல்லுங்கள்.

இதுவரை எந்த ஆட்சியிலும் மீட்கப்படாத அளவிற்கு 4,225 கோடி கோயில் சொத்துக்களை மீட்ட ஆட்சி தமிழக முதல்-அமைச்சரின் ஆட்சி, கவர்னர் சொன்ன 50 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு கடந்த ஆட்சியிலும் இருந்தது. அதில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட்டு திருக்கோயில் வசம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலமீட்பில் 6 இடங்களில் பாஜகவினர் ஆக்கிரமித்த நிலங்களை மீட்டோம் என்றார்.

இது சட்டத்தின் ஆட்சி; தவறு எங்கு நடந்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தை திருமண தடுப்பு சட்டம் 1930ஆம் ஆண்டே இயற்றப்பட்ட சட்டம். பெறப்பட்ட 4 புகார்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் சட்டப்படி விசாரிக்கப்பட்டதே தவிர இரட்டை விரல் பரிசோதனை நடந்ததாக எந்த குறிப்பிலும் இல்லை. இந்த பரிசோதனையில் கூட பெண் மருத்துவர்களே ஈடுபட்டதாக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

கவர்னரரை கேட்பது ஒன்றே ஒன்றுதான்; சட்டமீறல் விதிமீறல் நடந்தால் சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் சட்டம் அவர்கள் மீது பாயக்கூடாதா?. சிதம்பரம் தீட்சிதர்களுக்காக கவர்னர் தனியாக வகுத்துதந்துள்ளாரா?. சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

சிதம்பரம் கோயிலை பொறுத்தளவில் புகார்களின் மீதும் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கவர்னர் என்ன ஆண்டவரா? தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஆளும் ஆட்சி, ஒட்டுமொத்த ஒன்றியத்திற்கே கவர்னர் தேவையில்லை என்பதுதான் திமுகவின் கொள்கை.

கவர்னரின் குற்றச்சாட்டுக்களுக்கு அரசின் சார்பில் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். எங்களுக்கு பணிகள் அதிகம் உள்ளது. நாள் ஒன்றுக்கு 19 மணிநேரம் உழைக்க கூடிய முதல்-அமைச்சரை கூட கவர்னர் பாராட்டத்தான் செய்துள்ளார். ஆனால் ஏதோ ஒரு நிர்பந்தத்திற்காக இல்லாத பொய் குற்றச்சாட்டுக்களை அள்ளித்தெளித்து வருகிறார்.

காலாவதி ஆகப்போவது கவர்னர்தானே தவிர திராவிட மாடல் அல்ல. திராவிட மாடல் ஆட்சியை கர்நாடக தேர்தல் களத்தில் கூட பாஜகவே பயன்படுத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கே வழிகாட்டியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. அவர் எந்த இயக்கத்தை முன்னிலைப்படுத்த நினைக்கிறாரோ அந்த இயக்கமே தமிழ்நாட்டில் காலாவதி ஆகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்