வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சோளிங்கர், ராணிப்பேட்டையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களை திருத்தி இந்தி மொழியில் பெயர் வைப்பதை கண்டித்தும், அந்த சட்டங்களை பழையபடி நடைமுறைப்படுத்த கோரியும் சோளிங்கர் கோர்ட்டு முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கறிஞர் கூட்டமைப்பு சங்க தலைவர் ரகுராம்ராஜூ தலைமை தாங்கினார். சங்க செயலாளர் நாதமுனி, வழக்கறிஞர்கள் சக்கரவர்த்தி, சந்தானகிருஷ்ணன், பாஸ்கர், தமிழ்ச்செல்வன், லோகநாதன் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு புதிய சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்டத்தின் பெயர்களை இந்தி மொழிகளில் சூட்டுவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள மசோதாக்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பாபு, ராணிப்பேட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நித்தியானந்தம், செயலாளர் ஜான் சாலமன் ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.