சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-08-22 19:21 GMT

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

சிறப்பு கவனம்

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யும் போது காவல்துறையினர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு முதல் தகவல் அறிக்கை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரிடம் பாதுகாப்பற்ற சூழல் இருக்கும் நிலையில் குழந்தை நலக் குழுமம் குழந்தைக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை உறுதி செய்ய வேண்டும்.

முதியோர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து வரும் புகார்மீது சிறப்பு கவனம் செலுத்தி வழக்குப்பதிவு செய்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ராணிப்பேட்டை நகரத்திற்கு உட்பட்ட எம்.பி.டி. ரோட்டில் சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக சாலையின் சந்திப்புகளில் வேகத்தடைகள் மற்றும் தடுப்பு சுவர்களின் மையப் பகுதிகளில் 'வி' வடிவ பிரதிபலிப்பான் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி செயற் பொறியாளர் உடனடியாக செய்து முடிக்க வேண்டும்.

நடவடிக்கை

மாவட்டத்தில் செல்போன் கோபுரங்கள் அமைக்க அனுமதி வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மனுக்கள் அளித்துள்ளன. இம்மனுக்கள் மீது உரிய ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தெரிவித்தும் இது நாள் வரையில் ஆய்வறிக்கை கிடைக்கப்பெறவில்லை. இது கண்டிக்கத்தக்கது. ஆகவே அனைத்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களும் செல்போன் கோபுரங்கள் அமைக்க நிலுவையில் இருந்து வரும் மனுக்களை ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் விபத்துகளை தடுக்க உரிமம் பெறாத இடத்தில் பட்டாசு உற்பத்தி செய்தாலோ, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருப்பு வைத்திருந்தாலோ அந்த கடைகளை உடனடியாக சீல் வைக்கவும், அவ்வப்போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி, உதவி ஆணையாளர் (கலால்) வரதராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்