டாஸ்மாக் கடை முன் சலவை தொழிலாளி அடித்துக்கொலை

ஆரணியில் டாஸ்மாக் கடை முன் சலவை தொழிலாளி ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வியாபாரிகள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-04 18:33 GMT

சலவை தொழிலாளி

ஆரணி கொசப்பாளையம் பெரிய சாயக்கார தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 50). சலவை தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ்குமார், ஜெயக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளார்.

பிரகாஷ் மது அருந்தி வருவதால் அவரை விட்டு மனைவி சரஸ்வதி, மகன் ஜெயக்குமார் சென்னையில் வசித்து வருகின்றனர்.

பிரகாசுடன் மற்றொரு மகன் சுரேஷ்குமார் மட்டும் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் பிரகாஷ் மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து மது அருந்தி வரும் நிலையில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆரணி காந்தி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அவர் மதுபானம் வாங்க சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

ரத்த காயங்களுடன் பிணம்

அவரை மகன் சுரேஷ்குமார் தேடிச்சென்றபோது டாஸ்மாக் கடை முன் பிரகாஷ் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆரணி நகரப் போலீசில் இறந்த பிரகாசின் மகன் சுரேஷ்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தார்.

உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவரை யாரும் கொலை செய்தனரா? போதையில் தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணையை தொடங்கினர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக பிரகாஷ் உடலை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மறியலில் ஈடுபட முயற்சி

இதனிடையே சலவை தொழிலாளி பிணமாக கிடந்த டாஸ்மாக் கடை முன்பு குடிபோதையில் தகராறுகள் நடப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. மேலும் தினமும் மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகவும், கடந்த சில மாதங்களில் அந்த இடத்தில் சாலையை கடந்தபோது 3 பேர் வரை இறந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் சலவை தொழிலாளி பிரகாஷ் அங்கு பிணமாக கிடந்தார். இது போன்றவற்றாலும் மதுபிரியர்கள் குடிபோதையில் மோதிக்கொள்வதாலும் அருகில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆரணி காந்தி ரோட்டில் வணிகர் பேரமைப்பு தலைவர் எஸ்.டி.செல்வம், செயலாளர் செங்கீரன் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதில் வணிகர்கள் பேரமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த ஆரணி நகர போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் வியாபாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 500 டாஸ்மாக் கடைகளை அகற்றி நடவடிக்கை எடுத்தபோது நெருக்கடி மிகுந்த இடத்தில் உள்ள இந்த கடையை அகற்றவில்லை. எனவே உடனடியாக இதை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.

இதனையடுத்து நிர்வாகிகள் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரனிடமும், ஆரணி உதவி கலெக்டர் எம். தனலட்சுமியிடமும் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்