மடிக்கணினி திருடியவர் கைது
கல்லூரி விடுதிக்குள் புகுந்து மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி,
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் தங்கி இருந்து, கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று விடுதியில் உள்ள தனது அறையில் மடிக்கணினியை பயன்படுத்தி விட்டு வகுப்புக்கு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மடிக்கணினி திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சிவகுமார் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ஊட்டி டம்ளர் முடக்கு பகுதியை சேர்ந்த வினோத் என்பதும், விடுதிக்குள் புகுந்து மடிக்கணினி திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.