சாலைகளில் மண்சரிவால் போக்குவரத்து நிறுத்தம்
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவில் ஊட்டியை அடுத்த கல்லக்கொரை கிராமத்தில் இருந்து பி.மணியட்டி கிராமத்துக்கு செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையோரம் பெரிய பள்ளம் உருவானது. இதையடுத்து அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அங்கு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் மாற்றுப்பாதை அமைக்க தேவையான பணிகள் நடைபெறுவதோடு அபாயகரமான மரங்கள் வெட்டப்படுகின்றன.
தடுப்புச்சுவர் இடிந்தது
இதற்கிடையில் ஊட்டி வேலிவியூ பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.கூடலூர் நகரில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து லேசான வெயில் தென்பட்டது. மாலை 3 மணிக்கு பிறகு மீண்டும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் தேவர்சோலை பேரூராட்சி கணியம் வயல் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவரது வீடு மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தெருவுக்குள் வழிந்து ஓடியது. கூடலூர் சின்னப்பள்ளி வாசல் தெருவில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் தேங்கியது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு அடைப்புகளை அதிகாரிகள் சரி செய்தனர். ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் கனகராஜ், மரப்பாலம் பகுதியில் முருகேஷ் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தது. இதை அறிந்த பேரூராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். கூடலூர் 1-ம் மைல் பகுதியில் இருந்து ஆனைசெத்தக்கொல்லி செல்லும் சாலையில் ஆற்று பாலத்தையொட்டி மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலை மற்றும் பாலம் துண்டிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டி-அவலாஞ்சி சாலையில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.
மின்தடை
இது தவிர மஞ்சூர்-எடக்காடு சாலையில் முக்கிமலை பகுதியில் மரம் வேரோடு சாய்ந்தது. ஊட்டி- மஞ்ஜனகொரை சாலையிலும் மரம் சாய்ந்தது. அந்த மரங்களை தீயணைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து அகற்றினர். மஞ்சூர் சேரனூர் பகுதியை சேர்ந்த செல்வபுட்டு என்பவரின் வீடு மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் விழுவதால், பல்வேறு கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மழைக்கு 2 பேர் பலியாகினர். 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.