நில மோசடி செய்த 7 பேர் மீது வழக்கு

நில மோசடி செய்த 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-18 18:45 GMT

ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோவில் மகர்நோன்பு பொட்டல் ரோடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்வேந்தன் (வயது 32). இவரின் குடும்பத்தினருக்கு ராமேசுவரத்தில் 1.82 ஏக்கர் நிலம் உள்ளது. இவரின் தந்தையின் தாத்தா கருப்பையா பெயரிலான இந்த சொத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான 54 சென்ட் நிலத்தினை ராமேசுவரம் பர்வதம் பகுதியை சேர்ந்த ஆதிமூலம் மனைவி தாமரைசெல்வி என்பவர் பொது அதிகாரம் பெற்றிருந்தாராம். இந்நிலையில் பொது அதிகாரம் கொடுத்தவர் இறந்துவிட்டதை பயன்படுத்தி தாமரைச்செல்வி கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சோனைமுத்து என்பவரிடம் பொது அதிகாரம் கொடுத்த தமிழ்வேந்தனின் தாத்தாக்களில் ஒருவரான நம்புபிச்சை என்பவர் உயிருடன் இருப்பது போல் உயிர்வாழ் சான்றிதழ் பெற்றாராம்.

இந்த சான்றிதழை பயன்படுத்தி ஆவண எழுத்தர் ராமர்தீர்த்தம் சேவியர் ராஜன் பிரிட்டோ என்பவர் உதவியுடன் அன்புதாசன் என்பவருக்கு கிரையம் கொடுத்து மோசடி செய்துவிட்டாராம். இதற்கு சார்பதிவாளர் ஆதிமூலம், ராமர்தீர்த்தம் நம்புபிச்சை மகன் முனியசாமி, உச்சிப்புளி ஜெயபால் மகன் சேதுபதி ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம். இதுகுறித்து அறிந்த தமிழ்வேந்தன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் தாமரைச்செல்வி, அன்புதாசன், ஆதிமூலம், முனியசாமி, சேவியர்ராஜன் பிரிட்டோ, சேதுபதி, டாக்டர் சோனைமுத்து ஆகிய 7 பேர் மீது ராமநாதபுரம் நிலமோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்