போலி பத்திரம் மூலம் மோசடி

போலி பத்திரம் மூலம் மோசடி செய்த தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-11 18:08 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள போரிவயல் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 40). இவரது தந்தை வெங்கடாசலம் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் 26 சென்ட் நிலம் அதே பகுதியில் உள்ளது. காளிமுத்து மலேசியாவில் வேலை செய்து வந்தார். தற்போது ஊருக்கு வந்துள்ள அவர் இடம் சம்பந்தமாக அடங்கல் வாங்க கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்றார். அப்போது அந்த நிலம் புதுவயலை சேர்ந்த நைனா முகமது பெயரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பட்டா எவ்வாறு மாறுதல் செய்யப்பட்டது என அறிந்துகொள்ள தேவகோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல்களை எடுத்து பார்த்தார்.

அதில் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன தனது தந்தையின் முகத்தை மாற்றி, வேறு ஒருவரின் முகத்தை வைத்து போட்டோஷாப் செய்து கல்லலில் கணினி மையம் வைத்திருக்கும் கார்த்திகேயன்(40) என்பவரிடம் புதிதாக அடையாளம் அட்டை தயாரித்து வழங்கி நிலத்தை விற்பனை செய்தது தெரிய வந்தது.


இதுகுறித்து காளிமுத்து தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமாரிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் வேலாயுதப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி பத்திர மோசடி செய்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய தேவகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி பொறுப்பாளர் ராமநாதன் (32), அவரது உறவினர் கருப்பையா (65), கார்த்திகேயன் (40) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்