நிலக்கரி சுரங்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும்- கமல்ஹாசன் வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனமாகவே இருந்தாலும், மக்களின் எதிர்ப்பை கருத்தில்கொண்டு, சுரங்க விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடுவதே சாலச்சிறந்தது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-07-29 13:45 GMT

சென்னை,

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களில் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராடி வருகின்றனர். நிலக்கரி சுரங்கத்துக்காக பல நூறு ஏக்கரில் விளைநிலங்களைக் கையகப்படுத்த முற்படுவதும், அதற்கு எதிராக மக்கள் போராடுவதும் தொடர் கதையாகி வருகிறது.

பொதுத்துறை நிறுவனமாகவே இருந்தாலும், மக்களின் எதிர்ப்பை கருத்தில்கொண்டு, சுரங்க விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடுவதே சாலச்சிறந்தது. வேளாண் பெருமக்களின் எதிர்ப்பையும் மீறி, விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைபோகக்கூடாது. எதன்பொருட்டும் விவசாயிகளின் விளைநிலங்களைப் பறிப்பது ஏற்கத்தக்கதல்ல. விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தால்தான் வளர்ச்சி கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட வளர்ச்சி தேவையே இல்லை.

வயிற்றுக்கு சோறிடுவோரை வேதனைக்குள்ளாக்க வேண்டாம். விவசாயிகள், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்தவேண்டும். ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்