கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்- பெண் மனு

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவர் இறந்த நிலையில் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் எனக்கோரி 2 குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் பெண் மனு அளித்தார்.

Update: 2023-06-26 19:16 GMT

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவர் இறந்த நிலையில் தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் எனக்கோரி 2 குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் பெண் மனு அளித்தார்.

2 குழந்தைகளுடன் பெண்

தஞ்சை மாவட்டம் திருநீலக்குடி அருகே விட்டலூர் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது29). இவரது கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்தபோது உயிரிழந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் 2 குழந்தைகளுடன் வந்த ஜெனிபர் கலெக்டரிடம் அளித்த மனுவில், எனக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமனம் வழங்கி எனது வாழ்வாதாரத்திற்கு உதவ வேண்டும். எனது குழந்தைகளின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எனவே கருணை உள்ளம் கொண்டு கருணை அடிப்படையில் எங்கள் பகுதியில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியை வழங்கி எனக்கும் என் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கும் உதவி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

முதியவர் மனு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலூகா மேலஉளூர் தெற்குதெருவை சேர்ந்தவர் கண்ணையன் (வயது75). இவர் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், நான் மேல உளூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி வருகிறேன். அந்த வீட்டில் இருக்கும் என்னை அடித்து தூங்க விடாமல் துன்புறுத்தி வருகிறார்கள். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி என்னை அடித்ததால் ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். தற்போது நான் குடியிருக்க இடம் இல்லாமல் தவித்து வருகிறேன். என்னால் கட்டப்பட்ட வீட்டில் நான் குடியிருக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

சாலை விரிவாக்கம்

திருவையாறு கஸ்தூரிபாய் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் அளித்த மனுவில், திருவையாறு பேரூராட்சி பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் சுமார் 16 குடும்பங்கள் கடந்த 70 வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டிற்கும் முறையாக அரசிற்கு வரி செலுத்தி வருகிறோம். இந்தநிலையில் திருவையாறு சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கு எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. நாங்கள் குடியிருக்கும் தெருவில் எங்களின் வீடுகளுக்கு அருகாமையில் சுற்றுவட்ட பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அரசு அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர். எங்கள் இடத்திற்கு அருகே ஏராளமான காலியிடங்கள் உள்ளது. அந்த இடத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்