காரில், பெண்ணை கடத்தி சென்ற நிதிநிறுவன உரிமையாளர் உள்பட 5 பேர் கைது

தஞ்சையில், காரில் பெண்ணை கடத்தி சென்ற நிதிநிறுவன உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-17 20:18 GMT

தஞ்சையில், காரில் பெண்ணை கடத்தி சென்ற நிதிநிறுவன உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரில், பெண் கடத்தல்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். இவருடைய 31 வயதான கணவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம் 5 பேர், காரில் வந்தனர்.

அவர்கள் காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றனர். வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணை 5 பேரும் சேர்ந்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி அங்கிருந்து கடத்தி சென்றனர்.

போலீசில், கணவர் புகார்

பின்னர் கடத்தி சென்றவர்கள் அந்த பெண்ணின் கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கார், செல்போன்களை ஒப்படைத்துவிட்டு, உனது மனைவியை அழைத்து செல் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார்.

மடக்கி பிடித்தனர்

உடனே சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் லியோ, குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், சைபர் கிரைம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் பெண்ணை கடத்தி சென்ற கார் தஞ்சை-திருச்சி சாலையில் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று செங்கிப்பட்டி அருகே புதுக்குடி சோதனை சாவடி பகுதியில் காரை மடக்கிப் பிடித்தனர்.

மீட்டனர்

பின்னர் கடத்தி செல்லப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டதுடன் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அந்த பெண்ணை திருச்சி எல்.ஐ.சி. காலனி முருகவேல் நகரை சேர்ந்த வினோத் என்கிற வேதகிரி(வயது 39), இவரது சகோதரி பிரீத்தி(41), ஜீயபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன்(44), திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த ராஜா என்கிற ராஜப்பன்(32), பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(32) ஆகியோர் கடத்தி சென்றது தெரிய வந்தது.

கைது

இதையடுத்து இவர்கள் 5 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார். மேலும் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், வினோத் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடன் கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் பங்குதாரராக இணைந்து செயல்பட்டுள்ளார். பின்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில், தென்காசியில் நடந்த மோசடி தொடர்பாக வினோத் தரப்பை சேர்ந்த மாரியப்பனை சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட நபர்கள் கடத்தி சென்று கார், செல்போன்களை பறித்து கொண்டனர். இதற்கு கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் தான் காரணம் என வினோத் தரப்பினர் கருதினர். இதற்கு பழிவாங்கும் விதமாக அந்த பெண்ணை 5 பேரும் கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்