கோடை வறட்சியால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை

நெகமத்தில், கோடை வறட்சியால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-04-16 18:45 GMT

நெகமம்

நெகமத்தில், கோடை வறட்சியால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தீவன பற்றாக்குறை

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நெகமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மண் பாதைகள் அதிகளவில் இருந்தன. இதனால் பாதை ஓரங்களில் புல், அருகம்புல் மற்றும் இதர செடிகள் அதிகளவில் வளர்ந்து இருந்தது.

இதுதான் கால்நடைகளுக்கு தீவனங்களாக இருந்தன. மேலும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை காடுகள், விளைநிலங்கள், திறந்த வெளி பகுதிகளில் மேயவிடுவதால் அங்கு வளர்ந்து இருக்கும் பச்சை பசேலான புற்களை தின்று வந்தன.

இதன் மூலம் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு ஓரளவு தீவனத்தேவையை ஈடுகட்டி வந்தனர். ஆனால் தற்போது சிமெண்ட், கான்கிரீட் சாலைகள் உள்ளதால் அதன் ஓரங்களில் சிறு செடிகள்கூட வளர்வது இல்லை. மேலும் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததும், தற்போது கோடை வெயில் வறட்சி காரணமாக விளைநிலங்கள், காடுகளில் புற்கள் உள்ளிட்ட இதர செடிகள் வளர்ச்சி இல்லை. அப்படியே புற்கள் இருந்தாலும் அவைகள் காய்ந்து கருகிய நிலையில்தான் உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள் காய்ந்த புற்களை தின்னு வருகின்றன. இதன்காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பு அரிதாகும்

இதுகுறித்து கால்நடை வளர்ப்பவர்கள் கூறுகையில்:-

'நெகமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பல இடங்களில் பரவி வளர்ந்திருந்த புற்கள் கால்நடைகளுக்கு தீவனமாகியது.

தற்போது கோடை வறட்சி காரணமாக புற்களை காண்பதே அரிதாகி உள்ளது. அதனால் கால்நடைகள் காய்ந்த புற்களை உணவாக தின்று வருகிறது. இப்படியே போனால் சில ஆண்டுகளில் கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் அரிதாகி போகும் நிலை உருவாகும். இது எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்