பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-02-28 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா அகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி மகன் ராமு என்கிற ராமமூர்த்தி (வயது 32). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி வீட்டில் இருந்து வந்தார். அந்த சமயத்தில் சென்னையில் உள்ள ஒரு பள்ளி விடுதியில் தங்கியிருந்து 6-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதுடைய மாணவியும், கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்ட நிலையில் அகலூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்தார். கடந்த 25.9.2020 அன்று அந்த மாணவியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு ராமமூர்த்தி அழைத்துச்சென்று செல்போனில் தவறான படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராமமூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக அரசு சார்பில் ரூ.7 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராமமூர்த்தி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்