சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று புதைத்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

Update: 2023-02-21 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா கொண்டசமுத்திரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் சேகர் (வயது 41), தொழிலாளி. கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், மோட்டார் கொட்டகையில் குளித்துக்கொண்டிருந்தபோது சேகர் பார்த்துள்ளார்.

இதுசம்பந்தமாக அந்த பெண், தனது கணவரிடம் கூறவே அவர், சேகரிடம் சென்று தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

இதனால் அப்பெண்ணை பழிவாங்கும் நோக்கத்தில் சேகர் இருந்தார்.

பலாத்காரம் செய்து கொலை

இந்நிலையில் கடந்த 30.7.2016 அன்று அப்பெண்ணின் கரும்பு தோட்டத்திற்கு அவரது 12 வயது மகள் வந்தாள். இவளை பின்தொடர்ந்து வந்த சேகர், சிறுமியின் தலையில் கல்லால் பலமாக தாக்கினார்.

இதில் மயங்கி விழுந்த சிறுமியை சேகர் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவர், சிறுமியை கல்லால் அடித்துக் கொலை செய்து, உடலை அதே இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்தார்.

தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை சிறையில் இருந்து தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீடாக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சேகர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார். 

Tags:    

மேலும் செய்திகள்