வாலாஜாபாத் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

வாலாஜாபாத் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-30 16:30 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த சிங்காடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 60). கூலித்தொழிலாளி. ஓய்வு நேரங்களில் மீன் பிடிக்கும் வேலையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் சிங்காடிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரி, வடகிழக்கு பருவமழையின் காரணமாக முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரியில் நீர் நிரம்பி மீன்களும் அதிகம் கிடைத்து வருவதால் சேட்டு ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார். ஏரியில் இறங்கி வலையை வீசிய நிலையில் எதிர்பாராத விதமாக சேட்டு ஏரியில் மூழ்கினார்.

இதை பார்த்த அந்த வழியாக சென்ற மாடு மேய்க்கும் வாலிபர் பார்த்துவிட்டு கிராமத்திற்கு ஓடி வந்து தகவல் தெரிவித்த நிலையில் கிராம மக்கள் ஓடி சென்று ஏரியில் மூழ்கிய சேட்டுவை தேடினார்கள்.

இது குறித்து காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் காஞ்சீபுரம் தீயணைப்பு துறையினர் சிங்காடிவாக்கம் கிராமத்திற்கு விரைந்து சென்று படகு மூலம் சேட்டுவை ஏரியில் தீவிரமாக தேடினார்கள்.

தீயணைப்புத்துறையினரின் 5 மணி நேர தீவிர தேடலுக்குப் பிறகு சேட்டுவின் உடலை மீட்டனர். சேட்டுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்