திருச்செங்கோடு அருகே கல்குவாரியை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதாக குற்றச்சாட்டு

Update: 2022-11-28 18:34 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே கல்குசாரியை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கல்குவாரி

திருச்செங்கோடு அடுத்த பிரிதி கிராமம் இளையாம்பாளையத்தில் 14 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இங்கு எடப்பாடியை சேர்ந்த கல்குவாரி நிறுவனத்தினர் கடந்த ஒரு மாதமாக கற்களை வெடிகள் எடுத்தும், கெமிக்கல் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதையறிந்த அப்பகுதி கிராம மக்கள் பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் சசி தேவி தலைமையில் பா.ஜ.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் என 200-க்கும் மேற்பட்டோர் குவாரியை முற்றுகையிட சென்றனர்.

ஆனால் அங்கு டிப்பர் லாரி, கல்லுடைக்கும் எந்திரங்கள் என எதுவும் இல்லை. 300 மீட்டர் அளவிற்கு தோண்டப்பட்டு கற்கள் உடைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் கிரானைட் கற்கள் எடுப்பதால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வீடுகள் விரிசல் விடும் சூழல் ஏற்படும். பன்னீர் குத்திபாளையம் உள்ளிட்ட 7 கிராமங்கள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

இதுகுறித்து முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. கெமிக்கல் பயன்படுத்துவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, விவசாய நிலங்களுக்கு நீர் இல்லாமல் பயிர்கள் வாடி விடுகின்றன. இதேபோல் 10 கிலோ மீட்டர் தொலைவில் சித்தம்பூண்டி என்ற கிராமத்தில் குவாரிகள் அமைத்து அங்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த பகுதியில் குவாரி அமைக்க தடை கோரி கலெக்டர், தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஊர்நலன் கருதி விவசாய பகுதியாக உள்ள பிரிதி கிராமத்தில் குவாரி அமைக்க தடை செய்ய வேண்டும் என்றனர். குவாரியை ஏராளமான பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்