குருத்தோலை ஞாயிறு பவனி

குருத்தோலை ஞாயிறு பவனி;

Update: 2023-04-02 20:04 GMT

பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

தவக்காலம்

சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து கொண்ட ஏசு கிறிஸ்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். தவக்காலத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிள் பயணமாகவும் பூண்டி பேராலயத்துக்கு வந்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.

குருத்தோலை ஞாயிறு பவனி

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வாழ்த்து பாடலை பாடினார்கள். இதை நினைவு கூரும் வகையில் நேற்று

பூண்டி மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. நேற்று காலை பூண்டி மாதா மக்கள் மன்றத்திலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் தென்னங்குருத்தோலைகளை ஏந்தியவாறு கிறிஸ்தவ பாடல்களை பாடிய வண்ணம் பூண்டி மாதா பேராலயத்தை நோக்கி வந்தனர். குருத்தோலை பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்து பக்தர்களுடன் குருத்தோலைகளை கைகளில் ஏந்தி நடந்து வந்தார்.

சிறப்பு திருப்பலி

குருத்தோலை பவனி பேராலயத்திற்குள் வந்ததும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் சாம்சன், துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்குத்தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். திருப்பலியில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் தாங்கள் வைத்திருந்த குருத்தோலைகளை சிலுவை வடிவில் செய்து தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.

மாதாக்கோட்டை

நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டையில் உள்ள லூர்து சகாய அன்னை பங்கு ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. ஆலய பங்கு தந்தை பெரிங்டன் தலைமையில் குருத்தோலை பவனி ஊர்வலமாக சென்று புதிய லூர்து சகாய அன்னை ஆலயத்தை அடைந்தது. பின்னர் திருப்பலி நடந்தது. இதில் அருள் தந்தையர்கள், பங்குப்பேரவையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்