குமரி மீனவர்கள் 2 பேர் மாயம்
வெளிநாட்டில் மீன்பிடிக்க சென்ற 2 குமரி மீனவர்கள் மாயமானதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட கலெக்டரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.
நாகர்கோவில்:
வெளிநாட்டில் மீன்பிடிக்க சென்ற 2 குமரி மீனவர்கள் மாயமானதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட கலெக்டரிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.
மீனவர் மாயம்
குமரி மாவட்டம் கடியப்பட்டணம் புனித தோமையார் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கிய சுபா. இவர் நேற்று தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் கலெக்டர் அரவிந்திடம் ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் சகாய செல்சோ பகரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்வதற்காக சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அங்குள்ள தராத் என்ற பகுதியில் மீன் பிடிக்க சென்றார். பின்னர் 40 நாட்களுக்கு மேலாகியும் அவரை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால் நானும் எனது குழந்தைகளும் மிகவும் அச்சத்துடன் இருக்கிறோம். எனக்கு 6 வயதிலும், 3 வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளன.
என் கணவரை மட்டுமே நம்பி எங்களது குடும்பம் உள்ளது. தற்போது எனது கணவர் பற்றி எந்த ஒரு விவரமும் தெரியாததால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எனவே, எனது கணவரை பற்றிய தகவல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து அவரை மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
நடவடிக்கை
இதேபோல் கடியப்பட்டணம் வளனார் காலனியை சேர்ந்த சுபி ரோஸ் கேத்தரின் தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் பகரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அங்குள்ள தராத் என்ற பகுதியில் மீன் பிடிக்க சென்றார். பின்னர் 40 நாட்களுக்கு மேலாகியும் எனது கணவரை பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால் நானும் எனது குழந்தைகளும் மிகவும் அச்சத்துடன் இருக்கிறோம். எனக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
என் கணவரை மட்டுமே நம்பி எங்களது குடும்பம் உள்ளதால் அவரை மீட்க நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.