குறிஞ்சி ஆண்டவருக்கு காவடி எடுத்து ஊர்வலம்

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் காவடி திருவிழாவையொட்டி நடந்த ஊர்வலத்தை நீதிபதி கார்த்திக் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-05 16:39 GMT

குறிஞ்சி ஆண்டவர் கோவில்

பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி இந்த கோவிலில், கடந்த 46 ஆண்டுகளாக காவடி எடுக்கும் திருவிழா நடந்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான காவடி எடுக்கும் திருவிழா, தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தீர்த்த ஊர்வலம் கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலை வந்தடைந்தது.

காவடி எடுத்து ஊர்வலம்

இந்தநிலையில் கொடைக்கானல் நகர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தனர். அனைத்து காவடிகளும் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே ஒருங்கிணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காவடி ஊர்வலம் தொடங்கியது.

இதற்கு நகராட்சி முன்னாள் தலைவரும், காவடி விழா கமிட்டியின் கவுரவ தலைவருமான வி.எஸ். கோவிந்தன் தலைமை தாங்கினார். நகராட்சி முன்னாள் துணைத்தலைவரும், காவடி விழா கமிட்டியின் தலைவருமான எஸ்.ஆர். தங்கராஜ் வரவேற்றார்.

நகராட்சி முன்னாள் தலைவர் ஸ்ரீதர், மாரியம்மன் கோவில் கமிட்டி தலைவர் முரளி, வரதராஜ பெருமாள்கோவில் கமிட்டியை சேர்ந்த வீரராஜேஷ் கண்ணா, காவடி விழா கமிட்டி செயலாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடைக்கானல் நீதிபதி கார்த்திக் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பக்தர்கள் சாமி தரிசனம்

கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு, அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, மாப்பிள்ளை முதலியார் தெரு வழியாக சென்று குறிஞ்சி ஆண்டவர் கோவிலை ஊர்வலம் வந்தடைந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள், காவடி ஏந்தி வந்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து குறிஞ்சியாண்டவருக்கு 18 விதமான அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது.

அன்னதானம்

காவடி எடுக்கும் விழாவில் தொழிலதிபர் பழனி, டாக்டர் மதன்குமார், ராஜன் ஸ்டோர் உரிமையாளர் ஹரிராஜன், எஸ்.ஜி.பாண்டுரங்கன், ஜெயராமன், கணேஷ் பிரபு, என்ஜினீயர்கள் செல்வகுமார், தனசேகரன், இந்து முன்னணி நகர,ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், ஆனந்தகிரி இளைஞரணி தலைவர் முருகன், காவடி விழா கமிட்டியை சேர்ந்த வேலுச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் சுப்பிரமணி பால்ராஜ், கலாவதி தங்கராஜ், முன்னாள் கவுன்சிலர் ரங்கசாமி, நகர பிரமுகர்கள் சக்திமோகன், அண்ணாதுரை, இந்து முன்னணி நகர தலைவர் மோகன், அம்மன் டிரேடர்ஸ் உரிமையாளர் சரண்சதிஸ், எல்லையரசு கட்டுமான நிறுவன உரிமையாளர் அரவிந்த் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு எல்லையரசு நிறுவனத்தின் சார்பில், அதன் உரிமையாளர் தண்டபாணி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில் காவடி விழா கமிட்டி பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

கலை நிகழ்ச்சிகள்

திருவிழாவையொட்டி வேலப்பா பக்த சபை சார்பில் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் திருவிழாவையொட்டி நடந்த கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது. இதற்கான ஏற்பாடுகளை காவடி விழா கமிட்டியினர், கொடைக்கானல் வட்டார இந்து மகாஜன சங்கம் மற்றும் கொடைக்கானல் நகர, ஒன்றிய இந்து முன்னணியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்