அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
தடகள போட்டியில் வெற்றி பெற்ற அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு நடத்தப்பட்டது.
பெரியார் பல்கலைக்கழக அளவில் தடகளப்போட்டி நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. இதில் சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். மாணவி மீனாட்சி 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் பெற்றார். அதே போன்று ஜே.மனோன்மணி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், சரண்யா 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கமும் பெற்றனர். 21 கிலோ மீட்டர் நடை ஓட்டப்பந்தயத்தில் ஹெப்சி ஜோஸ்பின் வெண்கல பதக்கம் பெற்றார். அதேபோன்று மாணவிகள் மீனாட்சி, பாஞ்சாலி, காட்சிலா, மனோன்மணி ஆகியோர் தொடர் ஓட்ட போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் கீதா, பேராசிரியைகள் பூங்கோதை, மங்கையர்கரசி, உடற்கல்வி இயக்குனர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை பாராட்டினர்.