பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயத்தில் நினைவாலயம் என்ற பெயரை மாற்றாவிட்டால் போராட்டம்-தர்மபுரியில், கே.பி.ராமலிங்கம் பேட்டி

பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயத்திற்கு வைக்கப்பட்டுள்ள நினைவாலயம் என்ற பெயரை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தர்மபுரியில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.

Update: 2022-08-29 16:06 GMT

ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

தர்மபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர் வரவேற்றார். முன்னாள் எம்.பி. நரசிம்மன், சேலம் மாவட்ட தலைவர்கள் சுதிர்முருகன், சண்முகநாதன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 3 மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில், கே.பி.ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுப்பிரமணிய சிவா மாபெரும் தலைவர். இந்தியா என்ற நாடு உள்ளவரை இந்த நாட்டின் மக்கள் அனைவருடைய நெஞ்சிலும் நீங்காமல் நிறைந்திருப்பவர் பாரத மாதா. இதனால் தான் பா.ஜனதா கட்சியினர் இந்த தேசத்தை தாயாக, கடவுளாக மதித்து பாரத மாதாவுக்கு ஜே என்ற கோஷத்தை எப்போதும் எழுப்புகிறார்கள். சுப்பிரமணிய சிவாவின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பாப்பாரப்பட்டி மணிமண்டப வளாகத்தில் பாரதமாதா ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 11-ந் தேதி காவல்துறையின் அனுமதியுடன் பா.ஜனதா கட்சியினர் பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக சென்றோம். அங்கு அந்த வளாகம் பூட்டப்பட்டிருந்தது. பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று நாங்கள் கூறியபோதும் ஆலய வளாகத்தை திறக்க மறுத்து விட்டனர். இதனால் ஆலயத்திற்குள் நுழைந்து மாலை அணிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மாபெரும் போராட்டம்

ஆலய நுழைவு போராட்டம் நடத்திய நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறந்தவர்களுக்கு நினைவாலயம், நினைவுச்சின்னம் அமைப்பது வழக்கம்.

பாரதமாதா நினைவாலயம் என்று பெயரிட்டு இருப்பது முட்டாள்தனமானது. எனவே பாரதமாதா நினைவாலயம் என்ற பெயரை பாரதமாதா ஆலயம் என்று மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரத மாதா ஆலயத்தை தினமும் திறந்து வைத்து பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும். அதை வழிபாட்டுத்தலமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சியினரை ஒருங்கிணைத்து மாபெரும் கண்டன கூட்டம் நடத்தப்படும். அதன் பிறகும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்