ரூ.1½ கோடியில் சாமி சன்னதி பிரகார பணிகள் நிறைவு

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் ரூ.1 ½ கோடி செலவில் சாமி சன்னதியில் கருங்கற்களினால் ஆன பிரகார மண்டப திருப்பணிகள் நிறைவு பெற்றன.

Update: 2022-11-10 16:39 GMT


ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் ரூ.1 ½ கோடி செலவில் சாமி சன்னதியில் கருங்கற்களினால் ஆன பிரகார மண்டப திருப்பணிகள் நிறைவு பெற்றன.

அபூர்வ மரகத நடராஜர் சிலை

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் மங்களநாதர் திருக்கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.

மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இந்த மங்களநாதர் கோவில் சாமி சன்னதியின் முதல் பிரகாரம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது.

திருப்பணி

குறிப்பாக சாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும் வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும் பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது. இந்தநிலையில் பல ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்த சாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் கோவிலின் நிரந்தர அறங்காவலர் ராமநாதபுரம் ராணி பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் முயற்சியின் பேரில் பக்தர் ஒருவரின் நன்கொடை மூலம் ரூ.1 ½ கோடி நிதியில் திருப்பணிகள் நடைபெற்றன.

கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இந்த திருப்பணியில் முதல் பிரகாரத்தில் முழுமை பெறாமல் இருந்த இடத்தில் கருங்கல்லினால் ஆன தூண்கள் வைக்கப்பட்டு உள்ளது. 4 ஆண்டுகள் முடிவில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளது.

18 அடி உயரம்

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் மேற்பார்வையில் நடைபெற்று வந்த இந்த திருப்பணியில் சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் சுமார் 18 அடி உயரம் கொண்ட கருங்கல்லினால் ஆன 40-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டன. இதனிடையே கோவிலின் சாமி சன்னதி பிரகாரத்தை சுற்றி அமைக்கப்பட்ட தூண்களை சுற்றி கருங்கற்களினால் ஆன மேல்தளங்களும் முழுமையாக கட்டி முடித்து திருப்பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளன.

கோவில் உருவான காலத்தில் இருந்தே முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்த திருஉத்தரகோசமங்கை திருக்கோவிலில் சாமி சன்னதி பிரகாரம் தற்போது கருங்கற்களினால் ஆன தூண்கள் மற்றும் மண்டபங்கள் அமைக்கப்பட்டு முழுமை பெற்ற நிலையில் மிக அழகுற காட்சி அளிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்