மடத்துக்குளம் அருகே குளத்தின் கரையில் உயர் அழுத்த மின் கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குதிரையாறு அணை
திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதியையொட்டி குளத்துப்பாளையம் பகுதியில் சுமார் 450 ஏக்கரில் கோதையம்மன் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 550 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் அருகிலுள்ள மடத்தூர், மயிலாபுரம், என்.ஜி.புதூர், குளத்துப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுவதற்கு இந்த குளத்து நீர் பெருமளவில் உதவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீர் மற்றும் மழைநீர் இந்த குளத்தில் சேமிக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் கோதையம்மன் குளத்தின் கரையில் உயர் அழுத்த மின் கம்பம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோதையம்மன் குளத்தின் அருகில்
மின்கம்பம் அமைக்க எதிர்ப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோதையம்மன் குளத்தின் தெற்குப்பகுதியில் நேரடி பாசன வாய்க்கால் மூலம் 32 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த பகுதியில் உயர் அழுத்த மின் கம்பங்கள் அமைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மூலம் மின் வாரியத்துக்கு மனு அளித்தோம்.அதனைத் தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது. ஆனால் மீண்டும் கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறையினரின் வழிகாட்டுதலுடன் மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் மின் வாரியத்தினர் ஈடுபட்டுள்ளனர். களிமண் நிலத்தில் மின் கம்பங்கள் அமைத்தால் அவை விரைவில் சாய்ந்து விவசாயிகளுக்கும், தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
30 அடிக்கும் குறைவான இடைவெளியில் உயர் மின் அழுத்த பாதை செல்லும்போது தென்னை மரங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும்.மேலும் நேரடி பாசன வாய்க்கால் பராமரிக்க முடியாமல் நாளடைவில் அழியும் நிலை ஏற்படும். அத்துடன் குளத்தின் கரைகளும் சேதமடைந்து பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.மேலும் நாணல் உள்ளிட்ட காய்ந்த செடிகள் எளிதில் தீப்பிடித்து மிகப்பெரும் விபத்தை உருவாக்கக்கூடும்.எனவே விவசாயிகளின் நலன் கருதி உயர் அழுத்த மின் கம்பங்களை மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதையும் தாண்டி விவசாயிகளுக்கும், குளத்துக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மின் கம்பங்களை அமைக்கும் முயற்சி தொடர்ந்தால் பணிகளைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.