பழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் ஊராட்சி மீனவர்கள் மீன் பிடிக்கலாம் - சப்-கலெக்டர் உத்தரவு

பழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் ஊராட்சி மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவிட்டார்.

Update: 2023-05-27 08:53 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் அடங்கிய நடுவூர்மாதாகுப்பம் என்ற மீனவ கிராமம் உள்ளது. குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் குழு அமைத்து மீன்பிடித்து வந்தனர். அந்தோணி ஒரு குழுவாகவும், தேவதாஸ் மற்றொரு குழுவாகவும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் மீன்பிடிப்பதில் தகராறு ஏற்பட்ட பின்னர் மோதலாக மாறிய நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் பொன்னேரி தாசிலார் செல்வகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியாசக்தி, திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பலமுறை நடந்த இந்த பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து பொன்னேரி சப்-கலெக்டர் பழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் ஊராட்சி மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கூடாது என்று தடை விதித்தார்.

இதனால் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது இது குறித்து கோட்டைக்குப்பம் ஊராட்சி மீனவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தனர். அதன்படி பொன்னேரி சப்-கலெக்டர் உத்தரவின்படி வருவாய்துறை, மீன்வளத்துறை, போலீஸ் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு மீனவர்களிடம் கருத்துகளை கேட்டு அறிக்கைகள் சமர்ப்பித்தனர்.

இந்த அறிக்கையின்படி பேச்சுவார்த்தை நடத்த சம்பந்தப்பட்ட அனைவரும் அழைப்பு அனுப்பப்பட்டு கூட்டம் நடைபெற்றது.

கோட்டைக்குப்பம் ஊராட்சியை சேர்ந்த மீனவர்களிடம் நேரடியாக கருத்துகள் பெற்றனர். பின்னர் 2009-ம் ஆண்டு ஆர்.டி.ஓ. மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் உத்தரவின் பேரில் 14 ஆண்டு காலமாக மீன்பிடி தொழில் நடைபெற்று வந்ததுள்ளது. தற்போது அதே முறையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் உத்தரவிட்டார். மேலும் இதனை மீறும் நபர்கள் மீது திருப்பாலைவனம் போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போது பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியாசக்தி இருதரப்பு மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்த நிலையில் நடுவூர்மாதாகுப்பம் மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்