கொள்ளிடம் ஆற்றில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு

கொள்ளிடம் ஆற்றில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மேடான இடங்களுக்கு மக்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Update: 2022-09-07 18:22 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஆற்றில் 4-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மேடான இடங்களுக்கு மக்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நேற்று மாலை நிலவரப்படி 1 லட்சத்து 25 ஆயிரத்து 400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் உபநீரின் அளவும் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நேற்று மாலை 1 லட்சம் கன அடிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றின் வழியாக தண்ணீர் கடந்து சென்று வங்க கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பார்வையிட்டனர்

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியை மயிலாடுதுறை வடிநிலக்கோட்டை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் கரையோர பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருப்பதால் 4-வது முறையாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், மேலவாடி ஆகிய கிராமங்களை மீண்டும் தண்ணீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் மக்கள் உடனடியாக மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் கால்நடைகளையும் ஓட்டிச்சென்று மேடான இடங்களில் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்