கொல்லிமலை நம் அருவி பகுதியில்அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை
சேந்தமங்கலம்:
கொல்லிமலை நம் அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம் அருவி
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. மலைப்பகுதியில் 70 கொண்டை ஊசிகளை கடந்து செல்ல வேண்டிய இந்த சுற்றுலா தலத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி மற்றும் மாசிலா அருவிகள் உள்ளன.
இதில் கொல்லிமலையின் நுழைவுவாயில் கிராமமாக திகழும் சோளக்காட்டில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் நம் அருவி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் நம் அருவியில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. எனினும் நம் அருவி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. அதாவது அருவிக்கு செல்லும் வழி கரடு முரடாக உள்ளதால் கான்கிரீட் சாலை, அருவியின் மேல் பகுதியில் சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் பேவர் பிளாக் பதிக்க வேண்டும்.
உயர்கோபுர மின்விளக்கு
மேலும் கழிப்பிடம், இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் அருவியை கண்டு மகிழும் வகையில் உயர் கோபுர மின்விளக்கு ஆகியவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அரியூர் நாடு ஊராட்சி சார்பில் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் நலன்கருதி நம் அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை விரைந்த முடிக்க ேவண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.