கொடநாடு வழக்கு - முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மகனுக்கு சம்மன்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் .

Update: 2023-11-24 10:50 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது. இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார்.இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.  இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.

 கடந்த அக். 8ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

இதற்கிடையே கடந்த அக்டோபர் 13ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கனகராஜின் செல்போன் இருப்பிடம், அவர் எந்தெந்த எண்களுக்குப் பேசியிருந்தார் என்பது குறித்த தகவல்களைச் சேகரித்து வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். அப்போது வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, அந்த எண்கள் யாருடையது, ஆய்வுக்கு எங்கே அனுப்பப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

குஜராத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்த சிபிசிஐடி, நீதிமன்றத்தில் கூடுதல் அவகாசம் கோரியது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்திருந்தார். இதற்கிடையே அந்த வழக்கு இன்று மீண்டும் நீலகிரி செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 159 பேரிடம் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். அதேநேரம், குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட செல்போன் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அந்தத் தகவல்கள் கிடைத்தால் விசாரணையில் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றும் சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது

இந்த நிலையில் , இந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் .

கனகராஜ் விபத்தில் சிக்கியபோது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மகன் சிவ குமார் அவசர உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் , அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிவ குமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்