மனைவி தற்கொலை செய்ததை அறிந்து விஷம் குடித்து உயிரைவிட்ட ஆசிரியர்
மனைவி தற்கொலை செய்ததை அறிந்து, அவருடைய கணவரான ஆசிரியரும் விஷம் குடித்து உயிரை மாய்த்தார். பூட்டிய வீட்டில் இருந்து 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
திருமங்கலம்,
மனைவி தற்கொலை செய்ததை அறிந்து, அவருடைய கணவரான ஆசிரியரும் விஷம் குடித்து உயிரை மாய்த்தார். பூட்டிய வீட்டில் இருந்து 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
தமிழாசிரியர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கப்படை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 60). ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவருடைய மனைவி பாண்டியம்மாள் (50). இவர்களுக்கு வெங்கட்ரமணன் என்ற மகனும், சசிகலா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.
நாராயணமூர்த்தியும், பாண்டியம்மாளும் செங்கப்படை கிராமத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தூங்கச் சென்ற அவர்கள், நேற்று காலை வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் கதவை தட்டினர். யாரும் பதில் அளிக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நோய் கொடுமையால் தற்கொலை
இதுபற்றி அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முருகன், திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பாண்டியம்மாள் நீண்ட நாட்களாக சர்க்கரை நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, பாண்டியம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் அவரது கணவர் நாராயணமூர்த்தியும் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரியவருகிறது.
57 வயதில் தான் அரசு வேலை
நாராயணமூர்த்தி தமிழ் படித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருந்தார். அத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பித்து வந்தார். அவரது 57-வது வயதில் அரசு ஆசிரியர் பணி கிடைத்தது. அருகில் உள்ள வெள்ளாகுளம் கிராமத்தில் ஒரு வருடம் பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஆசிரியரும், அவருடைய மனைவியும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.