சுட்டெரிக்கும் வெயில்; கிர்ணி பழம் வரத்து அதிகரிப்பு

நாகையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கிர்ணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Update: 2023-04-02 19:15 GMT

நாகையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கிர்ணி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சுட்டெரிக்கும் வெயில்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவு இருக்கும். மற்ற காலங்களில் வெயில் சுட்டெரிக்கும். பொதுவாக ஏப்ரல் மாதம் 2-வது அல்லது 3-வது மாதத்தில் இருந்து தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

மே மாதம் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால் பருவ நிலை மாற்றம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக வெயில் வழக்கத்தை விட வாட்டி வதைக்கிறது.

கோடை காலம்

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். இந்த ஆண்டும் மார்ச் மாதத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துகொள்ள பொதுமக்கள் இளநீர், தர்பூசணி, சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கி பருகி வருகின்றனர்.

இதனால் குளிர்பானங்களின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பான கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

கிர்ணி பழம்

நாகையில் தற்போது கிர்ணி பழம் விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த பழத்தின் சுவை, சத்து, குறைந்த விலை ஆகியவை காரணமாக கிர்ணி பழம் ஜூஸ் சாப்பிடும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நாகையில் வெயில் தொடங்குவதற்கு முன்பு பழக்கடைகளில் மட்டும் அங்கம் வகித்த கிர்ணி பழம் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டதால் சாலையோரங்களில் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ ரூ.40 

திண்டிவனம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் கிர்ணி பழம் நாகை நகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் கிர்ணி பழத்தை கண்டவுடன் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுவே 3 கிலோவாக வாங்கினால் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிர்ணி பழம் அரை கிலோ முதல் 2½ கிலோ வரை உள்ளது. இந்த பழத்தின் பலனை அறிந்த பொதுமக்கள் இதனை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

நாகை ஆஸ்பத்திரி சாலை உள்ளிட்ட இடங்களில் கிர்ணி பழங்கள் ஆட்டோவில் வைத்து விற்கப்படுகின்றன. பொதுமக்களை கவர்வதற்காக பழங்களை பூக்கள் வடிவில் வெட்டி விற்பனை செய்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்