கீழ்பவானி பாசன திட்டம்: ரூ.720 கோடி செலவில் கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதால் எந்தபயனும் கிடையாது: கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி

கீழ்பவானி பாசன திட்டத்தில் ரூ.720 கோடி செலவில் கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதால் எந்தபயனும் கிடையாது என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கூறினார்.

Update: 2023-05-12 18:44 GMT

பேட்டி

கரூரில் நேற்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கீழ்பவானி பாசன திட்டம் ஒரு மழைநீர் அறுவடை திட்டம். இதனால் நீர் வீணாக கடலில் கலப்பதில்லை அரவக்குறிச்சி தொகுதியில் ஒரு விவசாய நிலத்தில் தான் முடிவடைகிறது. பலதரப்பட்ட பாசனங்களுக்கு பயன்படுகிறது. பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு குடிநீராக கொண்டு செல்லப்படுகிறது.

எந்தபயனும் கிடையாது

இறுதியாக வீராணம் சென்று சென்னைக்கு குடிநீராக செல்கிறது. ஆகவே இந்த கால்வாயை ரூ.720 கோடி செலவில் கான்கிரீட் கால்வாயாக மாற்றுவதால் எந்தபயனும் கிடையாது. இதனால் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும். ஏற்கனவே பரம்பிகுளம், ஆழியார் திட்டத்தில் கான்கிரீட் கால்வாய் அமைப்பது தோல்வியில் முடிந்துள்ளது. இதனை ஏன் இங்கு வந்து திணிக்க வேண்டும். ரூ.720 கோடி வீணாக போக இருக்கிறது.

இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும். கைவிடாமல் போனால் எங்களுடைய எதிர்ப்புகளை மீறி இத்திட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றிட முடியாது. அதைமீறி நிறைவேற்றினால் இந்த 10 தொகுதிகளில் இருக்கக்கூடிய பாசன பயனாளிகள் வருகிற 2024 தேர்தலை புறக்கணிப்பார்கள். 1958-ல் இருந்து தற்போது வரை கீழ்பவானி அணையின் நீர்நிர்வாகத்தில் அரசு ஆணை விதிமுறை, காவிரி தீர்ப்பு என எதுவும் பின்பற்றப்படவில்லை.

ஆற்றுநீர் மாடுபடும்

கடந்த ஆட்சியில் மணல் கொள்ளை நடக்கவில்லை. ஆற்று மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட், பி.சாண்ட் பயன்படுத்தினார்கள். ஆற்றில் அவ்வளவாக மணல் அள்ளப்படவில்லை. ஆனால் இந்த அரசு 25 இடங்களில் மணல் குவாரிகளை அமைத்து ஆற்று மணலை அள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மணலை அள்ளினால் ஆற்றுநீர் மாசுபடுவது கூடும். இது இயற்கைக்கு விரோதமான செயல். கட்டுமானங்களுக்கு எம்.சாண்ட், பி.சாண்ட் தான் பயன்படுத்த வேண்டும். ஆற்றுமணலை கட்டுமானங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்